Test

நூல் – எம். வி. வெங்கட்ராம் கதைகள்

ஆசிரியர் பாவைசந்திரன் (தொகுப்பு)

பதிப்பு விபரம் – கண்மணி பதிப்பகம், முதல்பதிப்பு 1998.

குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி.

     மணிக்கொடி எழுத்தாளர்களில் கடைசி கொழுந்து என அழைக்கப்பட்டவர் எம். வி. வெங்கட்ராம். அவருடைய நூற்றாண்டைப் பல்வேறு இலக்கிய அமைப்புகள் கொண்டாடி வருகின்றன. நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என 250 புத்தகங்களுக்கும்  மேல் எழுதியுள்ளார். அவருடைய கதைகள் அனைத்தையும் தொகுத்து கண்மணி பதிப்பக வெளியீட்டாளரான பாவைசந்திரன் எம். வி. வெங்கட்ராமன் கதைகள் என்ற தலைப்பில் 1998 இல் கொண்டு வந்தார். 200ரூபாய் விலையில் எம்.வி. வெங்கட்ராமன் புகைப்படத்தை நூலின் அட்டைப்படமாக கொண்டு 763 பக்க அளவில் வெளியிட்டார். அந்நூல் அருட்செல்வர் நா. மகாலிங்கம் ஆய்வு நூலகத்தில் இருப்பது மதிப்பிற்குரியது.

            இந்நூலுக்கு வெங்கட்ராமனின் பேத்தி டாக்டர் ஏ. ஆர். சாந்தி முன்னுரை எழுதி இருப்பது விசேஷமானது. இவரது படிப்பு, எழுதும் முறை, விரும்பி அருந்தும் காபி, நெசவுத்தொழில், வெற்றிலை போடும் பழக்கம், தாத்தாவின் இலக்கிய நண்பர்கள், அவர் நடத்திய இலக்கியக் கூட்டங்கள், கொண்டு வந்த பத்திரிகைகள், பாராட்டினாலும் விமர்சித்தாலும் அவரிடம் வெளிப்படும் சிரிப்பு என பல்வேறு விஷயங்களை எழுதி இருக்கிறார்.

          இப்பெரும் தொகுப்பில் 54 கதைகள் இருக்கின்றன. பாதி எனக்காகவும் பாதி பசிக்காகவும் எழுதினேன் என்று பொதுவாக அவர் கூறினாலும் சிறுகதைகளைப் பொறுத்தவரை இலக்கியத் தரத்துடன் எழுதியிருக்கிறார்.

             எம். வி. வெங்கட்ராம் கதைகளைப் பல உத்திகளில், பரிசோதனைகளில் எழுதிப் பார்த்திருக்கிறார். வித்தியாசமான மனிதர்களைக் கதை உலகிற்குள் கொண்டு வந்திருக்கிறார்.  ‘பைத்தியக்காரப் பிள்ளை’ என்ற மகத்தான ஒரு கதையை எழுதியிருக்கிறார். ‘பூமத்தியரேகை’ ‘வேலைக்காரி தூங்குகிறாள் நாயும் காக்கிறது’ ‘பெட்கி’ ‘மாப் பாய்’ போன்ற மிக நல்ல கதைகளைத் தந்திருக்கிறார்.

       எம்.வி.வி. நிகழ்வுகளைச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறார். இதில் என்ன இருக்கிறது? ஏன் இப்படி நடந்தது? எதற்கு இப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதற்கான விடைகளை வாசகர்கள் தேடிக் கண்டடையும்படி விடுகிறார். இது ஒரு நல்ல உத்திதான். அழகி, பனிமுடி மீது ஒரு கண்ணகி முதலிய கதைகள் காமத்தை உதறிவிட்டு பேரானந்தத்தை அடைவதற்கான ஆன்மீகத் தேட்டத்தைக் காட்டுகின்றன. ‘பூமத்தியரேகை’ ‘மூக்குத்தி’ ‘இனி புதிதாய்’ ‘வேலைக்காரி தூங்குகிறாள் நாயும் காக்கிறது’ கதைகள் மனிதவாழ்வில் புதையுண்டிருக்கும் சிடுக்குகளைப் பற்றி நுட்பமாகப் பேசுகின்றன. ‘பைத்தியக்காரப் பிள்ளை’ பெட்கி’ ‘ மாப் பாய்’ கதைகள் மனித நெருக்கடிகளைத் தீவிரமாகப் பேசுகின்றன.

       புதிய புதிய பரிசோதனைகளில், புதிய புதிய உத்திகளில், புதிய புதிய கதைகள் எழுதி பார்த்தவர். வறுமை சூழலிலும் ஒரு நல்ல படைப்பாளியாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர். பொதுசமூகத்தில், மனப்போக்கில் இருந்து சற்றே விலகிய கொஞ்சம் வித்தியாசமான குணாம்சம்கொண்ட மனிதர்களின் இயல்பான வாழ்க்கையில் நேரும் நெருக்கடிகளைச் சிக்களைக் கதைகளில் எழுதியுள்ளார். சுயநலம் மனிதர்களை எப்படியெல்லாம் ஆக்கி வைத்திருக்கிறது என்பதை நமக்கு கதைகளின் வழி காட்டுகிறார். நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த மூத்த படைப்பாளி வெங்கட்ராமன்.

அவரை அறிந்து கொள்வதோடு நவீன சிறுகதை வரலாற்றில் அவர் உண்டாகியிருக்கும் அழுத்தமான தடத்தை அறியவும் இத்தொகுப்பு உதாரணமாக இருக்கிறது.

  • முனைவர் சு. வேணுகோபால்

தமிழ்த்துறைத் தலைவர்

Latest news
Related news

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்