நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம் 

செய்தி மடல் 

கோயம்புத்தூர் குமரகுரு கல்வி நிறுவனங்களின் அங்கமாகத் திகழும் நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம் அறிவுலகின் அரும்பெட்டகமாக திகழ்ந்து வருகின்றது. தமிழியல் சார்ந்த உயராய்வுகள், உலகளவிலான தமிழ் அமைப்பு மற்றும் ஆய்வுமையங்களை ஒருங்கிணைத்து தமிழியல் ஆய்வுசார்ந்த அறிவுத் திரட்சியை உருவாக்குவது முதலிய இம்மையத்தின் உயரிய நோக்கங்களுள் அரிய தமிழ் நூட்களை அறிவுலகிற்குப் பரவலாக்குவதும் அடிப்படை அங்கமாகும். ஏறத்தாழ ஒரு இலட்சம் தமிழ் நூல்கள் அடங்கிய இவ்வாய்வு மையத்தின் ஆய்வு நூலகம் பல அரிய தமிழியல் நூல்கள் அடங்கியப் பெட்டகமாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாய்வு நூலகத்தின் நூல்வகைப்பாடும் புதுமைநோக்கிய ஒன்றாகும்.  

நூல்களைக் கால மற்றும் இலக்கிய வகைமை அடிப்படையில் வகைத்தொகைப் படுத்தாது நிலவியல், தொல்லியல், மானுடவியல், மொழியியல், கலையியல், நவீனவியல் எனும் ஆய்வு நோக்கி வகைத்தொகைப் படுத்தப்பட்டிருக்கும் இந்நூலகத்தின் கட்டமைப்பு முறைமையும் குறிப்பிடத் தகுந்தவொன்றாகும். இவ்வகைப்பாட்டிற்குள் அரிய நூல்கள், ஆய்வு ஏடுகள், இலக்கிய இதழ்கள், ஆங்கில நூல்கள் போன்றவையும் அடங்கும். மேற்கூறியப்படி இச்சீரிய ஆய்வு நூலகத்திலுள்ள அரிய நூல்களை, இதுவரை நூலகத்தில் மட்டும் அடைக்கலமாகியிருக்கும்  நூல்களை அறிவுலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கோடு தமிழாய்வு மையத்தின் இந்த மாதாந்திர செய்தி மடல்   திகழ்கின்றது.  

ஆய்வுமையத்தின் ஆய்வுக்களங்களில் நான்கு நூல்கள் குறித்த விரிவான அறிமுகத்தினை அந்நூல்களின் நிழற்படங்களுடன் இந்த மாதாந்திர செய்தி மடல் பகர்கின்றது. மேலும் இந்நூலகத்திலுள்ள சில அரிய புத்தகங்களின் நிழற்படமும் அதன் சிறு விபரத்துடன் தருகின்றது. அறிவினைப் பரவலாக்கவும், அறிவு மற்றும் ஆய்வுலகில் இயங்கும் ஆய்வாளர்களுக்கு அறிவுத்துணை நல்கும் விதமாகவும், நூலக அறைக்குள் அடங்கிக்கிடக்கும் அறிவுக்காற்றினை உலகிற்கு வெளியிடும் நல்விருச்சமாகவும் இச்சீரிய முயற்சி விளங்கும் என்று எண்ணுகிறோம்.   

முனைவர் இரா.ஜெகதீசன்,  

                                                                  பொறுப்பாளர்,  

                                                                                                       நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம் 

Latest news
Related news

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்