துணியவியலாத தொன்மையுடைய தமிழ்மொழியின் அறிவுக்கொடைகள் இலக்கிய இலக்கணமெனும் இருகரையுள், தொல்லாணை நல்லாசிரியர்க்கூடி, முதல், கரு, உரி எனும் பொருள்கண்டு ஆக்கிய சங்கஇலக்கியம், ஐந்தின் முழுமைக்கும் வரைமுறை வகுத்த இலக்கணங்கள், ‘ஓதலில் சிறந்தது ஒழுக்கமுடைமை’ என்று அறத்தைப்பகரும் அற இலக்கியங்கள், கற்றோர் வழங்கிய காப்பியத்தமிழ், ‘காதலாகி கசிந்து’ உயரிய இறைக்காதலைப் பாவாய் பாடிப் பரவிய பக்தி இலக்கியம், நுண்பொருளையும் நுணுகிக்கண்ட உரைவளங்கள், அந்தாதியாய், கலம்பகமாய், அரியநற் கோவையாய் உலாவந்த சிற்றிலக்கியங்கள், சிலேடையாய், இரட்டுறமொழிதலாய் அறிவையும், உணர்வையும் பிணைக்கும் தனிப்பாடல்கள், ஈட்டுரையாய், சாத்திர உரையாய் மெய்ப்பொருள் அளந்த பக்தியுரைகள், மாற்றத்தையும் மாட்சியினையும் ஏற்கும் உயிர்ப்பின் சான்றாய், ஏற்றமிகு எழிலகமாய் மிளிரும் புதுக்கவிதை, உரைநடை, சிறுகதை, புதினம், அறிவியல்தமிழ், இணையத்தமிழ் என்று எழுச்சிமிகுந்தெழும் பேரலையாய், நீளத்திரைக்கடலாய், திரவியங்கள் திரண்ட செவ்விலக்கியங்களை ஏந்திச் சிறக்கின்றது.
தொன்மைமிகு உலக நாகரிகங்களுடன் தொடர்புடையதாக விளங்கும் தமிழரின் தொன்மைநிலைக்குத் தக்கச் சான்றுபகர்கின்றது அவர்தம் வணிகத்தொடர்பும், மொழிபரவலும். கிரேக்கம், ஹீப்ரு போன்ற உலகத் தொன்மொழிகளில் கலந்துநிற்கின்ற தமிழ்ச்சொற்களும் அக்காடியா, அபிஸீனியா, போன்ற பல்வேறு நாடுகளின் மொழிகளிலும் தமிழோடு ஒத்த சொற்கள் மலிந்திருப்பதும் தமிழின் தொன்மைக்கும், வளமைக்கும் காட்டாகும். பிளினி, தாலமி, மெகஸ்தனீஸ் போன்ற அயல்நாட்டவர்களின் குறிப்புகளும், எகிப்து நாட்டில் ‘பெரினிகெ’ முதலிய இடத்தில் கிடைத்த பண்டையத் தமிழெழுத்துப் பொறித்த ஓடு, தாய்லாந்தில் கிடைத்த தமிழெழுத்துப் பொறிக்கப்பட்ட ‘பெரும்பதன்கல்’, அலெக்சாண்டிரியா அருங்காட்சியகத்திலுள்ள பண்டைய முசிறி வணிகன் கையெழுதிட்ட வணிக ஒப்பந்தம், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அகழாய்வில் கிடைத்த உரோமானிய, கிரேக்க, சீன காசுகள், அணிகலன்கள், ஜாடிகள் போன்றவைகளும், கம்போடிய நாட்டின் அங்கோர்வாட்டில் தமிழர்களின் கட்டடக்கலையில் அமைக்கப்பட்டுள்ள கோயிலும் தமிழரின் செம்மாந்த நாகரிகத்திற்கு நிலைக்களமாகும்.
‘மதுகை இன்றி பயிற்றுத்தீ தணிய’ என்ற சுயமும், வளாள் சுட்டும், ‘வேப்பும் கடுவும் போல’ என்று கூற்றுவனுக்கே காப்பிடும், சித்தமருத்துவம் உள்ளிட்ட தொல்மருத்துவத்திற்கெல்லாம் வித்தாகத் திகழும் தமிழர் மருத்துவமும் ‘நெய்யொடு இமைக்கும் ஐயவி திரள்காழ்போல’ சிறப்புடையது.
வேத்தியல், பொதுவியலுமாய் கூத்தின் வகைமைக்கண்டும், முப்பெரும் அமைப்புடை அரங்குக்கண்டும், ஆரமோடு, காற்சிலம்பு, கைத்தொடி, வீரக்கழல் என்று மருத்துவம் பிணைந்து விளங்கும் ‘ஒள்ளொளி சேயிழை’ அணிகளையும் ‘அரவுரியன்ன’ ஆடையினையும், தரணிபுகழ்த் தழையுடையினையும் கண்டதும் உலகம் போற்றிய கொற்கை முத்துக்கள், உரோம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளுக்குக் கல்மணிகளை ஆக்கி அனுப்பியமை போன்றவை தமிழரின் ஆபரணச் சிறப்பின் மணிமுடியாகும்.
தமிழெனும் உணர்வின் உவப்பில் படைத்தும், தொகுத்தும், தொகுப்பித்தும் தமிழுலகிற்கு புலவரும் புரவலருமாய் அணிசேர்த்த சான்றோர்களின் வரிசையில் தமிழ்வளர்த்தவர் அருட்செல்வர் நா.மகாலிங்கம் அய்யா அவர்கள். தமிழ்ப்பணி செய்துக்கிடப்பதையே தம்வாழ்வின் பொருளாய்க்கொண்டு வாழ்ந்தவர் அருட்செல்வர். மறைந்துவிட்டதென கருதிய இசைநூலான ‘பஞ்சமரபின்’ மீட்சியும், காந்தியாரின் சிந்தனைத்திரளைக் த் கருவூலமாக்கித் தமிழுலகிற்கு அளித்தமையும், மெய்ஞானம் விளம்பும் திருமுறைப் பதிப்பினையும், அருட்பெருஞ்சோதியின் அருளமுதச் சிந்தனைகளையும் ஞாலக்கொடையாக்கியவர். உலகப்பொதுமறையினையும், பக்திச்சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய திருத்தொண்டர் புராணத்தையும் அயல் மொழிகளில் ஆக்கி அருளியவர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ‘ஓம்சக்தி’ கலை இலக்கிய, ஆன்மீக இதழினை நடத்தி வந்த பெருமைக்குரியவர்.
ஒரு மடமும், பல்கலைக்கழகமும் ஆற்றவேண்டிய அரும்பணியைத் தனி ஒருவராக ஆற்றிய ஆன்றோர் பெருந்தகை. ஏற்றமிகு தமிழேட்டினையெல்லாம் எளியவர்களின் கரங்களில் எட்டவைத்தமை, தமிழறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் பன்வழிகளில் இடையறாது ஆக்கமும் ஊக்கமும் அளித்தமை இவரின் அரும்பணிக்கு முடிமேற்பதித்த ஒளிக்கல்லாய்த் திகழ்வன.
செந்நாப்போதரின் தந்தைக்கடனாம் ‘அவைக்கு முந்தியிருப்பச் செயலுக்கு’ ஆரமிடும் வண்ணம் எண்ணற்ற கல்வி நிறுவனங்களைத் தோற்றுவித்தவரின் கனவுகளின் சிறகு இன்று வரைந்துச்செல்லும் பிரபஞ்சமாய் விளங்குகிறது இந்த நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் கொணரல் வேண்டுமென்ற முண்டாசுக்கவிஞனின் வேட்கையினையும், முன்னோர்களின் அறிவுக்குவியலைக் கடைந்து, உலகத்தை உய்விக்க அமுதம் வார்க்கும், மெய்ப்பொருள்காணும், பேரறிவின் செயலிற்கு அச்சாணியாக இம்மையம் அடிகோலுகின்றது.
வளியையும், வெளியையும், அனலையும், புனலையும் அரவணைக்கும் விசும்பாய் சான்றோர்களை அரவணைத்த அருட்செல்வரின் திருப்பெயர்த்தாங்கிய இந்த ஆய்வுமையம் தமிழ்நூல் காப்பகச்செம்மல் புலவர். பல்லடம் மாணிக்கம் அய்யாவின் தமிழ்நூல் காப்பகத்தையும் தன் ஓர் அங்கமாய் ஆக்கிநிற்பது அறிவுலகப்பேறாகும்.
‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்’ எனும் முதுகலியின் மணிமொழியை நிகர்த்த உலகொடு உறைய, மானுடச் சமூகத்திற்குச் சகடமாய் விளங்குவது அறிவுத்தேடலும், கல்விப்பரவலுமாகும். உற்றுக்கற்பதும் உறுவதுதேடலும் மானுடத்தின் அறிவுநிலையாகும். சார்புவாழ்வும், பரிமாற்றமும் உயிர்ப்பிக்கும் மானுடத்தின் ஆவணங்களாக இலக்கியங்கள் விளங்குகின்றன. வாய்மொழியாய் தோன்றி செம்மொழியாய் விரிந்த, மரபார்ந்த, பண்டுடுத்திய தமிழரின் வழக்காற்றியல் ஆவணங்களைச் சேகரித்துத்திரட்டி, பாதுகாக்கும் அறிவுக்களஞ்சியமாக விளங்குவதே இந்தத் தமிழாய்வு மையத்தின் மையநோக்கமாகும்.
பஃறுளியாறும் பன்மலை அடுக்கமும் குமரிக்கோடும் கொடுங்கடல் கொண்டது போல கடல்கோளாலும், வேற்றரசின், வேற்றுச் சிந்தனைகளின் கால்கோல்களாலும், சேகரித்துத் தொகுக்கும் ஆர்வமின்மையினாலும் அழிநிலையுற்ற தமிழிலக்கிய வளங்கள் எண்ணிலடங்காதன.
உயிரையும் ஊனையும் வார்த்து, அருபொருள் அரைத்து, அலைந்துக்காத்த அருந்தொகையாய் எஞ்சியப் பண்டைய இலக்கியங்களையும், காலவகையினால் கனிந்திருக்கும் தற்கால இலக்கியங்களையும், அனுபவமெனும் அறிவின் அணித்தொகையாய், செவ்விலக்கியத்தின் கருவாய் விளங்கும் பழங்குடிகள் முதலானோரின் அனுபவ அறிவினையும் வழுவின்றிப் பெட்டகமாக்கி, உலகநிலைக்கேற்ப மின்னாக்கம் செய்து, பரவலாக்கி, நிலைத்தன்மை அளிப்பது இம்மையத்தின் தலையாய நோக்கங்களுள் ஒன்றாகும்.
‘ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்’ என்று உள்ளதன் நுணுக்கமும், இல்லதன் அடைவினையும் ஆயும் ஆய்வுகளை முன்னெடுத்து, அறிவின் முதற்பொருளை அடைவதையும், அதன்வழி புதியன படைப்பதையும், தடையன தகர்ப்பதையும் முன்னெடுக்கும் பன்னாட்டளவிலான உயர்கல்வியையும், உயராய்வுகளையும் மேற்கொள்வது, இதுகாறும் மேற்கொள்ளப்பட்டுள்ள உயராய்வுகளைத் தொகுத்து ஆவணப்படுத்துவது, எதிர்கால ஆய்வுகளுக்குத் தகவல் களஞ்சியங்களை அளிப்பது, ஆய்விற்குரிய நிதிநல்கைகளுக்கு வழிபடுத்துவது, தமிழாய்வுகளை உலகளவிற்கு விரிவாக்குவது போன்றவையும் இம்மையத்தின் சீரிய நோக்கநிலையுள் குறிப்பிடத் தகுந்தவைகளாகும்.
உலகளாவிய நிலையில் செயல்படும் ஆய்வு, தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து, அறிவினைப் பகிர்ந்து பாதுகாக்கின்ற தகவல் – தரவுகளின் ஒருங்கிணைந்த மையமாக அமைந்தியங்குவது இம்மையத்தின் சீரிய நோக்கமாகும். அதற்குரிய முன்னெடுப்புகளாக நிலவியல், தொல்லியல், மானுடவியல், மொழியியல், கலையியல், நவீனவியல் முதலான அறிவுப்புலம்சார்ந்த தகவல்களைத் திரட்டுவது, தொடர்புடைய நூல் மற்றும் ஆவணங்களை முறையாக்குவது எனும் உயரிய நோக்கத்தோடு இம்மையம் பயணப்படுகின்றது.
உலக இலக்கியங்களையெல்லாம் உயர்தமிழில் பெயர்க்க விருப்பிய மகாகவி பாரதியின் எண்ணத்திற்கு ஏற்றம் சேர்க்க, அறிவுஏல, மொழிவளம்பெற தமிழ்மொழி பனுவல்களைப் பிறமொழிகளிலும், பிறமொழிப் பனுவல்களைத் தமிழ்மொழியிலும் மொழியாக்கம் செய்யும் சூழலை ஏற்படுத்துவதும் இம்மையத்தின் தொலைநோக்கங்களுள் ஒன்றாகும்.
அறிவுநோக்கிய ஆர்வலர்களின், அறிவுப்பகிரும் பொதுமக்களின் கூட்டோடு அறிவின் பன்முகப் பரிமாணங்களை அடக்கிய அறிவுலகமாக திகழ்ந்து தமிழாய்வின் குன்றாத ஒளிவிளக்காய் அமைவதே இம்மையத்தின் முழுமை நோக்கமாகும்.
‘ஆ கெழு கொங்கர் நாடகப்படுத்த’ என்று சங்கம் தொட்டும், ‘குரவலர் சோலையணி திருப்பாண்டிக் கொடுமுடியணைந்தனர் கொங்கில்’ என்று திருமுறைகளிலும் எடுத்தாண்ட தொன்மைமிகுந்த, தெளிசுவை தேனெனும் பொருள் நிறைக்கொண்ட கொங்குநாட்டின் பொங்குமெழில் கொங்குத்தமிழின் சுவை உலகறியும். சிலம்பிற்கான அடியார்க்கு நல்லாரின் உரை, பவணந்தியாரின் நேரிய நன்னூல், கொங்குவேளீரின் பெருங்கதை என சீர்மிகு இலக்கியங்கள், உரோமனியர் நாணயங்கள் மிகுதியாகக் கிடைத்த கணையமுத்தூர், வெள்ளளுர் உள்ளிட்ட இடங்கள், தமிழகத்தில் பழமையான இசைக்குறிப்புகளைக் கொண்ட அறச்சலூர் கல்வெட்டு, கொங்கேழ் தலங்கள், பத்திற்கு மேற்பட்ட வைப்புத்தலங்கள் எனும் சமயம் மற்றும் கட்டடச் சிறப்பு என்று எண்ணிலடங்காத அருமைகளை உட்செறித்துள்ள கொங்கின் மணிமுடியாய்த் திகழ்வது கோயம்புத்தூராகும்.
இருபதிற்கும் மேற்பட்ட வணிகப் பெருவழிகளைக் கொண்ட, தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனும் சிறப்புடைத்த கோயம்புத்தூர் கொடுமணல் அடைந்து மணிக்கற்களைப்பெற வஞ்சித்துறைமுகத்தின் வழியில் வந்த உரோமானியர்களுக்கு வழி சமைத்த பெருமையுடையது. தலைச்சிறந்த சிற்பக்கலைக்குச் சான்றாக மிளிரும் பேரூர் பட்டீஸ்வரர் திருத்தலம், நாட்டில் முதல்முதலில் தனியார் மின்சார உற்பத்தி, தற்போது கல்வி மற்றும் மருத்துவத்தில் முன்னணியிடம் எனும் கோயம்புத்தூரின் சிறப்புக் கதம்பங்களுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கின்றது கோயமுத்தூர் சரவணம்பட்டியில் அருட்செல்வரால் தோற்றுவிக்கப்பட்ட குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி.
1984 ஆம் ஆண்டு முகிழ்ந்த இக்கல்லூரி இன்று பல்வேறு கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய குமரகுரு கல்வி வளாகமாக பரந்து விரிந்துள்ளது. எண்ணிலடங்காத புதுமைகள் விளைந்த இக்களத்தில் மேலுமொரு அறிவுப்புதுமையாய் நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம் அமைந்துள்ளது. ‘அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக’ தமிழார்வத்தின் அரும்பொருளாய், மாணிக்கம் அய்யாவின் மனவுணர்வின் நீள்பொருளாய், அறிவுலகின் கட்டியமாய் விளங்கும் இவ்ஆய்வுமையத்தின் ஆய்வுநூலகம் தொன்மையும், சீர்மையும், நுண்மையும் கொண்ட அரிய பல ஆவணங்களை உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆன்றோர் புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பினைப்போன்று விளங்கும் இம்மையத்தின் ஆய்வுத் திட்டத்தில் அமைந்துள்ள ‘நிலவியலில்’ புவியியல் அமைப்பு, திணைக்கோட்பாடு, கருப்பொருட்கள், நீர்மேலாண்மை, மரபு வேளாண்மை, கனிமவளங்கள் எனும் துணைப்பிரிவுகள் அமைகின்றன. ‘தொல்லியலில்’ தொல்பொருட்கள், கல்வெட்டியல், செப்புப்பட்டயங்கள், சுவடியியல், பண்டைய ஓவியங்கள், கட்டடக்கலை, சிற்பம் மற்றும் செப்புத் திருமேனிகள் எனும் துணைப்பிரிவுகள் அமைகின்றன.
‘மானுடவியலில்’ மரபறிவு, இனவரைவியல், சமூகவியல், நம்பிக்கைகள், சடங்கு, உணவு மற்றும் மருத்துவம் எனும் துணைப்பிரிவுகள் அமைகின்றன. ‘மொழியியலில்’ இலக்கியம், இலக்கணம், மொழிபெயர்ப்பியல், கலைச்சொல்லாக்கம் எனும் துணைப்பிரிவுகள் அமைகின்றன. ‘கலையியலில்’ மரபுக்கலைகள், கைவினைக் கலைகள், நிகழ்த்துக்கலைகள், நுண்கலைகள் முதலியனவும், ‘நவீனவியலில்’ உரைநடை, நாடகம், குறும்படம், ஆவணப்படம், திரைப்படம், ஊடகவியல், அறிவியல் தமிழ் மற்றும் கணினித்தமிழ் உள்ளிட்டவையும் களங்களாக அமைகின்றன. இந்த ஆய்வுக்களங்களில் குறிப்பிட்ட இலக்கினைக் கண்டடைந்ததும் அடுத்த அடைவுகளை நோக்கி இம்மையத்தின் சீரிய செயல்பாடுகள் தொடரும்.
‘அருளில் பிறக்கும் அறநெறியெல்லாம் மொழியில் பிறக்க’, கேட்டல், படித்தல், பகர்தல், படைத்தல் எனும் பல்வேறு பரிமாணங்களில் அறிவினைப்பகர இம்மையத்தின் பெயரிலான அரையாண்டு ஆய்விதழொன்று வெளியிடப்படவுள்ளது. ஆய்வுச் சொற்பொழிவுக் கூட்டங்களும் , ஆண்டிற்கொரு பன்னாட்டுக் கருத்தரங்கும் நிகழ்த்தப்படவுள்ளன. இம்மேற்காண் நிகழ்வுகளை இணையவழியில் கண்டுப் பயன்பெறும் வண்ணம் நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புகளையும், செயல்பாடுகளையும் இம்மையம் மேற்கொள்கின்றது.
அறிவின் பகிர்வுநிலையென்பது ‘புதுமொழி கூட்டுண்ண’ வழிகோலுவதாகும். ஆர்வமிகுந்த ஆன்றோர்களையும், சான்றோர்களையும், அரியோர்களையும், எளியோர்களையும் உணர்வால், செயலால் ஒருங்கிணைக்கும் அறிவின் ஆயமாக இம்மையம் திகழ்கின்றது. தன்ஆர்வலர்கள் இம்மையத்திற்கு வருகைத்தந்து உதவுவதற்கும், இம்மையத்தின் நோக்கத்திற்குரிய செயல்பாடுகளுக்குத் துணைநிற்பதற்குமான சூழலை ஆக்கமுடன் இம்மையம் உருவாக்கியுள்ளது. மேலும் பொதுமக்கள் அரியதாகக் கருதிக் காத்து வருகின்ற ஓலைச்சுவடிகள், நூல்கள், நிழற்படங்கள் உள்ளிட்ட அரும்பொருட்களை, அவர்களின் விருப்பத்துடன் இம்மையத்தில் ஒப்படைப்பதற்கான சூழலை ஏற்படுத்தி, அவ்வரிய பொருட்களைத் தொடர்ந்து பாதுகாக்கும் பணியினையும் இம்மையம் மேற்கொள்கின்றது.
வைரம் தீட்ட ஒளிரும், அறிவுப் பகிர மிளிரும் என்பதற்கேற்ப அரிய பனுவல்கள், சிற்றேடுகள், சிற்றிதழ்கள், கையெழுத்துப்பிரதிகள், ஆய்வேடுகள், நிழற்படங்கள் முதலான அறிவின் பன்முகப் பரிமாணங்களைத் தொகுத்து எளிதில் கைக்கொள்ளும் ஞானச்சேகரமாய் இம்மையம் விளங்குகின்றது. இவ்ஆய்வு மையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் இதன் இணையத்தளத்தில் தமிழ், ஆங்கில மொழிகளில் அமைந்துள்ளன. தொடர்ந்து உலகமொழிகள் பலவற்றிலும் அமைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
பண்பாட்டு ஆவணங்களைக் களாய்வின் மூலமும் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்களின் மூலமும் திரட்டிப் பாதுகாத்தல், அதுதொடர்பான உயராய்வுகளுக்கு வேண்டிய தரவுகளை அளிப்பதோடு அவற்றை நெறிப்படுத்தி தரமான தமிழாய்வுகளை வெளிக்கொணர்ந்து ஒருங்கிணைந்த தமிழ்வளர்ச்சிக்கு உதவுதல் போன்ற சீரிய செயல்பாடுகளோடு ‘நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார் புலன் நாவிற் பிறந்தசொல் புதிதுண்ணும் பொழுதன்றோ’ எனுமாறு, பயனுற பொழுதளக்கும் அறிவு நோக்கிய தேடலிற்கான சூழலையும் ‘கற்றது ஒழுகு’ எனும் மகாகவி பாரதியின் மேவலையும், ‘ஒழுக்கமே வாழ்வு’ எனும் அருட்செல்வரின் கனவினையும் அடையும் ‘பெரிதினும் பெரிது கேட்கும்’ அறிவின் அட்சயப்பாத்திரமாக நா. மகாலிங்கம் தமிழ்ஆய்வு மையம் திகழ்கின்றது தெள்ளுதமிழின் ஆசியோடு.
© Copyrights Reserved Kumaraguru Institutions